Chandramukhi 2 Box Office: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது வரையிலும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்பு வெளியான சந்திரமுகி படத்தின் 2வது பாகம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியானது.
சந்திரமுகி படத்தினை பி.வாசு இயக்கிய நிலையில் இதனுடைய இரண்டாவது பாகம் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் கலவை விமர்சனத்தை பெற்றது மேலும் சந்திரமுகி படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து கதாபாத்திரங்களும் பயங்கரமாக சொதப்பப்பட்டு இருந்தது.
முக்கியமாக ரஜினி நடித்திருந்த வேட்டையன், கங்கனா ரணாவத் நடித்திருந்த சந்திரமுகி போன்ற கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இவ்வாறு சந்திரமுகி 2 படத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து ட்ரோல் செய்தனர். அப்படி முதல் நாள் 7.5 கோடியும், இரண்டாவது நாளில் ரூபாய் 4.50 கோடியும் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில் சந்திரமுகி படத்தின் நாயகி கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 படம் ரூபாய் 40 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரையிலும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இதன்படி சுமாரான வசூலை தான் சந்திரமுகி 2 பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
ஆனால் சந்திரமுகி 2 படம் மொத்தம் 17 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் ரசிகர்கள் உண்மை தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக ஓரளவிற்கு வசூல் செய்திருக்கும் எனவே இது குறித்து தயாரிப்பு நிறுவனம் உண்மை தகவலை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.