தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பல சிறந்த படங்களை கொடுத்து தேசிய விருது பெற்றுள்ளார். அந்தப் படங்களைத் தொடர்ந்து அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அதற்கான காரணம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு மீண்டும் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனுஷ் கையில் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் இருக்கின்றன. இந்த படங்களில் முதலாவதாக திருச்சிற்றம்பலம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தேறியது. அதில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த படத்தை தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியுள்ளார்.
படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் பல விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் பேசியது, நிறைய பேர் ஒன்றரை வருஷம் கழிச்சு தனுஷ் படம் வருவதால் மாசான படமாக இருந்தால் நல்லா இருக்கும் என சொன்னாங்க. படத்தைப் பொறுத்த வரைக்கும் நிறைய மாஸ் இருக்கு ஆனா அதையும் தாண்டி ஒரு மாஸ் இருக்குனா, அது கடைசி காலத்துல குழந்தையா மாறின அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கிறது ஒரு மாஸ், செஞ்ச நன்றியை என்னைக்கு மறக்காமல் இருக்கிறது மாஸ், நம்ம மேல தப்பு இல்லனாலும் அந்த சூழ்நிலை சரியாகுவதற்காக இறங்கி வந்து மன்னிப்பு கேட்பதும் மாஸ்.
அப்படி பார்த்தால் திருச்சிற்றம்பலம் படம் பயங்கர மாஸ் தான் ஏனென்றால் இயக்குனர் மித்ரன் ஜவகர் ரொம்ப நல்ல மனுஷன் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. மேலும் தனுஷ் பேசியது இசையமைப்பாளர் அனிருத்தின் இசையை உலகம் கேட்பதற்கு முன் நான் கேட்டவன், அவர் சிறப்பாக வருவார் என்று சொன்னேன் அதைப்போல் தற்போது வந்து விட்டார் என்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார் தனுஷ். திருச்சிற்றம்பலம் படம் ஒரு அப்பா மகன் கதை எனவும் கூறியுள்ளார்.