இயக்குனர் தங்கர்பச்சான் மதுக்கடை திறப்பு குறித்து அரசாங்கத்தை விளாசி ஆதங்கத்துடன் எழுதியது.!!

thangar-bachantamil360newz
thangar-bachantamil360newz

Director Thangarbachan wrote to the government on the opening of the bar: உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அத்தியாவசிய தேவைக்கே திண்டாடி வருகிறார்கள்.

விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில் தான் இதை நான் எழுதுகிறேன். உலக நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவர்களும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதை  குறித்து நமது மாநிலத்தை பாராட்டி வந்தாலும், கோயம்பேடு சந்தை கொரோனா தொற்றின் மையமாக மாறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்நிலையில் நிபந்தனைகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைப்பது என்பது மிச்ச மீதி உள்ளவர்களையும் மது கடைகளின் மூலம் கிருமிகள் பரப்பப்படும். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மேலும் போதையில் குடிமகன்களுக்கு எந்த ஒரு நிபந்தனையும் தெரியாது.

மேலும் அடுத்த நாள் குடிக்க பணம் இல்லாமல் ஏற்கனவே வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களிடம் குடிக்க பணம் கேட்டு அடிப்பது, பின்பு வீட்டில் இருக்கும் பொருட்களை அடமானம் வைப்பது  என பல பிரச்சனைகளுக்கு அரசாங்கமே வழிவகுக்கிறது.

உயிருக்கு பயந்து குடியிலிருந்து 43 நாட்கள் மீண்டிருந்த மக்களை அரசாங்கமே மீண்டும் குடிக்கு மக்களே அடிமைப்படுத்துகிறது. அரசாங்கத்தின் வருமானத்திற்காக மக்கள் குடியிணை முற்றிலுமாக மறந்து விடுவார்களோ என எண்ணி அரசாங்கமே மதுக்கடைகளை திறக்கிறார்கள் என்ற எண்ணம் எழுகிறது.

நான் சிறுவயதாக இருந்தபோது  அரசாங்கத்திற்கு தெரியாமல் சாராயம் காச்சுபவர்கள் மற்றும் அதனை வாங்கி குடிப்பவர்கள் என அனைவரையும் அரசாங்கமே தண்டிக்கும்.  40 ஆண்டுகளுக்குள் மக்களை காக்க வேண்டிய அரசாங்கமே சாராய கடைகளை எடுத்து நடத்தி வருகிறது. இந்த பேரழிவு காலத்தில்கட இப்படி செய்யலாமா எனக் கேட்டாள் ஆட்சி நடத்த பணம் இல்லை அதற்காகத்தான் மதுக்கடைகளை திறக்கிறோம் எனச் சொல்வது எவ்வளவு பெரிய கேடுவிளைவிக்கும் அவமானத்துக்கு உரிய செயல்?

மேலும் அரசியல்வாதிகள் மக்களை வாழ வைப்பதற்காக தான் அரசியலுக்கு வருகிறோம் என்று கூறிவிட்டு அரசியலுக்குள் நுழைந்து ஊழலை அறிமுகப்படுத்தினார்கள். தான் மட்டும் திருடினால் தான் கேள்விகள் எழும் என்று தனக்குக் கீழே உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடைநிலை  கட்சிக்காரர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என அனைவரும் ஊழல் செய்ய அனுமதிதார்கள். மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்ததும் அவர்களின் வாயை மூடுவதற்காக  வாக்குகளுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடுவார்கள்.

அரசியலை தொழிலாக நினைத்து வரும் அரசியல்வாதிகள் சொத்து சேர்ப்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவார்கள். இவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் எவ்வளவு சொத்து இருந்தது என்று மக்களுக்கு தெரியும். வாழ்வாதாரத்தை இழந்து வருமானத்தை இழந்து மூன்று வேளை உணவு 2 வேலையாகக் சுருங்கி, வாழும் மக்களிடம் நன்கொடை கேட்கும் அரசாங்கத்தை உலகத்தில் எங்கேயும் கண்டதுண்டா?

உயிர் பற்றிய கவலையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு 5 கிலோ அரிசிக்காக அதிகாலையிலேயே வந்து வரிசையில் இடம் பிடித்து நிற்கும் மக்களையும் பார்த்து ஈவு இரக்கம் இல்லாமல் எவ்வாறு இப்படி செயல்பட முடிகிறது. ஒரே இரவில் பணமதிப்பிழப்பு சட்டத்தை உருவாக்கி மக்களின் சேமிப்பை எல்லாம் எடுத்துக் கொண்டவர்களுக்கு தேவைக்கு அதிகமான பணமும், மக்களிடம்  ஊழல் செய்து திருடி கொள்ளையடித்த பணமும் எங்கே இருக்கிறது என தெரியாதா?

அவற்றையெல்லாம் இதே மாதிரி சட்டம் போட்டு பிடுங்கினால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மக்களிடமிருந்து வரி வாங்காமலே சிறந்த ஆட்சியை நடத்தலாம். மக்கள் பணம் 65 ஆயிரம் கோடியை பணக்கார முதலாளிகளுக்கு கடனாக கொடுத்துவிட்டு அந்த கடனை ஒரே அறிவிப்பில் தள்ளுபடி செய்து அதற்கு காரணம் கூறுபவர்களை எந்த அரசியல்வாதிகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை?

இதையெல்லாம் செய்யாமல் வருமானம் இல்லாததால் மதுக்கடைகளை  திறக்கிறோம் என கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா நோயாளிகளை கையாளும் நிலையில் மேலும் 750 திருமணக்கூடங்கள் மருத்துவமனைகளாக மாறி கொண்டிருக்கின்றன.

மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம் பெறும் கடைநிலை அரசு ஊழியர்கள், அதிகாரிகள், முதலமைச்சர்கள், நீதிபதிகள், ஆளுநர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் வரை அவர்களின் குடும்பங்கள் உட்பட எவருமே அரசு மருத்துவமனையை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே அவைகள் என்பதால் பெயரளவிற்கு மட்டுமே இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழையக் காத்திருக்கும் கொரோனா கிருமீ இனி ஒருவரையும் விட்டு வைக்க போவதில்லை. எத்தனையோ குடும்பங்களில் புதிதாக பிறந்த குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இனிமேல் அவர்கள் எல்லாம் நோய்த் தொற்றுக்கு  ஆளாவார்கள். ஏற்கனவே நம்மிடம்  முறையான மருந்துமில்லை,  மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், ஊழியர்களுக்கும் பற்றாக்குறை. இவர்களையெல்லாம் இனி எங்கே கொண்டு படுக்க வைக்கப் போகிறீர்கள்?

மருத்துவத்திற்கும் வாழ்க்கை நடத்தவும் மக்களை அலையவிட்டு எத்தனை பிணங்கள் ஒரு நாளைக்கு விழுகிறது. எத்தனை பேருக்கு நோய் பரவி இருக்கிறது என்ற செய்தியைத்தான் நாள்தோறும் ஊடகங்கள் கொடுத்துக் கொண்டிருக்க போகின்றன?

எது நடந்தாலும் எதை செய்தாலும் மக்கள் மறந்து விடுவார்கள் அதனால் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என அரசியல் அரசியல்வாதிகள் கணக்கு போடலாம். அதற்கு மக்கள் உயிரோடு இருந்தால்தான் முடியும். ஒரு வேலை அவர்களின் கணக்கு இப்படியும் இருக்கலாம்.

வேட்பாளர்களின் குடும்பம் மட்டுமே வாக்களித்து மக்களாட்சி என்ற பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா. நிதி நெருக்கடியில் உள்ள தமிழகத்தை தனி பகை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தயவுசெய்து மதுக்கடைகளை இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மக்களை காப்பாற்றுங்கள்! இயக்குனர் தங்கர்பச்சான்.

தற்போது இந்த செய்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.