Kamal Haasan: கமல்ஹாசன் நேற்று லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசும்பொழுது தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சி குறித்து தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தனது வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொண்டது தமிழ் திரையுலகினர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை அடுத்து லயோலா கல்லூரியில் பேசிய கமலஹாசன் சிறிய வயதிலேயே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் இளைஞன் ஆன பின்னர் 20 வயது 21 வயது இருக்கும் பொழுது சினிமாவே என்னை ஒதுக்கியது போல இருந்தது. அப்போது எனக்கும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது ஆனால் என்ன ஆகும்னு பார்த்திடலாம்னு ஒரு குருட்டு தைரியத்தில் கடைசி வரை முயற்சி செய்ய முடிவெடுத்தேன்.
இப்போ உங்கள் முன் கமல்ஹாசன் ஆக நிற்கிறேன், மரணம் அனைவர் வாழ்விலும் ஒரு அங்கம் அது வரும்போது வரட்டும் நாமாக அவசரப்பட்டு விடக்கூடாது. தற்கொலை எண்ணத்தை தாண்டி வாழ்ந்தவர்கள் பலர் சாதனையாளர்களாக உள்ளனர் என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார்.
சிறு பிரச்சனைகளுக்கு கூட இது போன்ற பெரிய முடிவை எடுக்கக் கூடாது என்றும் கூறினார். கமலஹாசன் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிக்பாஸ் 7வது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் நிலையில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்புகளை முழுமையாக முடித்துள்ளார்.
மேலும் பிரபாஸின் கல்கி படத்தில் வில்லனாக நடித்து வரும் இவர் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக்க உள்ள ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.